மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் திறக்கப்பட்ட தற்காலிக மீன் சந்தையில் பொதுமக்கள் மீன் வாங்க சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் குவிந்துள்ளனர்.
இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் குறைந்து வந்த தொற்று பாதிப்பானது தற்போது அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா தொற்றை குறைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.