வனப்பகுதிக்குள் கும்கி யானையின் உதவியால் விரட்டப்பட்ட யானை மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயியான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கருப்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தி திடீரென தோட்டத்தில் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது காட்டு யானை ஒன்று வாழைகளை முறித்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து திருமூர்த்தி வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் கருப்பன் யானையை விரட்டியடித்தனர். இந்நிலையில் கருப்பன் யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தது. மேலும் ஏற்கனவே கருப்பன் யானையை கும்கி யானைகளின் உதவியால் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.