நாடு முழுவதும் நாளை முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் வழிப்பாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை. எனவே நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நோய் தொற்று குறையாக காரணத்தால் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிப்பாட்டு நெறிமுறைகளை தமிழகத்தில் வெளிப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 3ம் தேதி தலைமை செயலாளர் தலைமையில் சமய தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்துக்கள் எட்டப்படவில்லை. இந்த நிலையில், வழிபாட்டு தலங்களை திறந்தால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் கோயில்களை திறக்கும் அவகாசத்தை ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக இந்து அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. எனவே நாளை கோயில்கள் திறக்கப்படாது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.