கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கியதில் பலியானவர்களுள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது இறந்து போனவர்களையோ கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள், சைரன் ஒலி இல்லாமல் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் தொடர்ந்து கேட்கப்படும் சைரன் ஒலியால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக தகவல் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மிதமான பாதிப்பு இருப்பவர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலமாக மருந்துகள் வாங்குவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல அம்புலன்ஸ் டிரைவருக்கும் உதவியாளருக்கும் தேவையான பயிற்சி, முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்றுவிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும்போது ஏற்பட்ட தொற்றினால் நிறைய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.