சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என காதலன் மிரட்டியதால் காதலி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தில் முத்து சரவணன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சுற்றியதோடு அடிக்கடி தனிமையில் சந்தித்து முத்து சரவணன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த இளம்பெண் முத்து சரவணனிடம் கேட்டதற்கு அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் அந்த இளம் பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து என்ன செய்வதென்று அறியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து முத்து சரவணன் தனிமையில் இருந்தபோது, இருவரும் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக அந்த பெண்ணை மிரட்டியதால் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முத்து சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.