பாக்கி தொகையை வசூலிக்க என்ற மாணவரை போலீசார் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை காலனியில் யூனிட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வணங்காமுடி என்ற மகன் உள்ளார். இவரது தாயார் கரூர் மாவட்டத்தில் வணிக வரித்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வணங்காமுடி தனது தாயாருடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.வி.ஆர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும், ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது நிறுவன பொருளானது துவாக்குடியில் உள்ள ஒரு கம்பெனிக்கு சப்ளை செய்யப்பட்டதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 536 ரூபாய் பாக்கி இருந்துள்ளது. இந்த தொகையை வசூலிக்க முடியாததால் அவரின் சம்பளம் நிறுத்தப்பட்ட காரணத்தால் கண்ணப்பா ஹோட்டல் பகுதியில் உள்ள அந்த நிறுவன முதலாளியின் வீட்டிற்கு பாக்கி தொகையை கேட்டு சென்ற போது திடீரென அங்கு வந்த போலீசார் வணங்காமுடியை ஜீப்பில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியதோடு காலால் எட்டி உதைத்துள்ளனர்.
அதன்பிறகு வலுக்கட்டாயமாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அவரிடம் கையொப்பம் மற்றும் கைரேகை பெற்றுக்கொண்டு இனிமேல் அந்த நிறுவன முதலாளியின் வீட்டிற்கு பணம் வசூலிக்க சென்றால் உன்னை தொலைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே பாக்கி தொகையை வசூலிக்க சென்ற தன்னை அடித்து உடைத்த போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷ்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என இந்த மாணவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.