அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்களை எச்சரித்து இனவெறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் இந்திய மற்றும் சீன தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக இனவெறி கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு முகநூல் பதிவில் இதுபோன்ற துன்புறுத்துதல் மற்றும் குற்றங்களை நாங்கள் வெறுக்கிறோம் என காவல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ‘உன் நாட்டிற்கு திரும்பு’ என தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் “அதிக அளவு இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பல துறைகளில் இருந்து நாட்டு குடிமக்களின் வேலையை பறித்து விட்டீர்கள். எனவே காலதாமதமின்றி எங்களின் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறியாக வேண்டும்.
இல்லை என்றால் விளையாட்டு மைதானம், பணியிடம், நீச்சல் குளம் என எங்கு தென்பட்டாலும் இரக்கமில்லாமல் சுட்டு தள்ளுவதை விட தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதோடு அந்த கடிதம் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவருக்கே அனுப்பப்பட்டிருந்தது. பல இலக்கண பிழைகளை கொண்ட அக்கடிதம் தனிநபரை குறிக்காமல் அமெரிக்காவில் வசித்துவரும் ஒட்டுமொத்த சீனர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து எழுதப்பட்டிருந்தது. கடிதம் குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அமெரிக்காவில் அதிக அளவு வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் H1-B விசா மூலம் அமெரிக்காவிற்கு வரும் தொழிலாளர்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்களில் இந்தியர்களே அதிகம். விசாவை புதுப்பிக்க இந்தியர்கள் குடும்பம் மற்றும் வேலையை அமெரிக்காவில் விட்டு இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், அதிபர் டிரம்ப் இந்த வருடத்தின் இறுதி வரை புது விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டார். அதன் பிறகு பல கோரிக்கைகளை முன்வைத்ததால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.