திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சலின் தீவிரம் குறையாத 11 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 19 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சுகாதார நிலைய அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.