குஜராத் மாநிலம் கோத்ராவில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடும் படி கூறியுள்ளனர். அதற்கு இவர்கள் மறுத்துள்ளதால் பைக் செயின் மற்றும் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாக மண்டையில் தாக்கியுள்ளனர். பின்னர் தாக்கியது மட்டுமில்லாமல் இனி இப்பகுதியில் உங்களைப் பார்த்தால் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோத்ரா போலீசார் பாதிக்கபட்டவர்கள் பேசும் நிலையில் இல்லாததால் மேலும் விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இருந்தாலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு 5 பேரை கைது செய்துள்ளோம். ஒருவரை தீவிரமாக தேடி வருகிறோம். அனைவரும் 17 வயதிலிருந்து 23 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக இதுபோல வடமாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என முழங்ககோரி தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.