Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் மரணம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்.!

வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் சேர்ந்து அருகே உள்ள வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசன் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்வினி, ஜெயஸ்ரீ ஆகியோர் தமிழரசனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கியபடி உயிருக்குப் போராடியுள்ளனர்.

அச்சமயம் அவ்வழியே வந்த வெங்கடேசன் என்பவர், பொதுமக்கள் உதவியுடன் சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாணாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சிறுவர்களின் சடலங்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.

Categories

Tech |