தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்டார் ரேட்டிங்கை தற்போது கோவை மாநகராட்சியும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதால் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளிலும் திடக்கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு கையாளப்படுகிறது. இதன் மூலம் தூய்மை மாநகராட்சி என்ற இலக்கை கோவை எட்டியுள்ளதால், குப்பை இல்லாத மாநகராட்சியாக 3 நட்சத்திர அங்கீகார சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கவுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 15 நாட்களுக்குள் கோவை மாநகராட்சிக்கு நேரில் வந்தோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ தங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் வெளியிட்டுள்ளார்.