அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில் 15 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவர்களை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இந்த பயங்கர சம்பவத்தில் 17 மற்றும் 14 வயதுடைய மாணவிகள் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு ஆசிரியர் உட்பட 8 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை சரணடையுமாறு எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கியைக் கீழே போட்ட அந்த மாணவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளான். அதன்பிறகு துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த நபர்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் டேட் மைர் என்ற 16 வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துவிட்டான். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் இரண்டு பேரின் நிலைமை தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுபோன்ற தாக்குதல் பள்ளிக்கூடத்தில் மீண்டும் நடக்கலாம் என்ற வதந்தி ஒரு பக்கம் பரவி வருவதால் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இறந்த டேட் மைர் என்ற மாணவர் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பதால் அந்த மாணவனின் பெயரை பள்ளிக்கூடத்தின் மைதானத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் சமீப காலங்களாக அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் குறிப்பாக துப்பாக்கிச்சூடு சம்பவம் பள்ளிக்கூடங்களில் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும் 138 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பள்ளிக்கூடங்களில் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.