தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை கொடுப்பதால், இந்த வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், மதுக்கடைகளை திறக்க உத்தரவு பெற்றுவிட வேண்டுமென்று மூன்று விஷயங்களை வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மூன்று முக்கிய விஷயங்கள்:
முதலாவதாக மதுக்கடைகளை நடத்துவது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இரண்டாவதாக முதல் நாள் என்பதால் சமூகவிலகளில் ஏதோ ஒரு தவறு நடந்து விட்டது, அதனை காவல்துறையை வைத்து நாங்கள் கட்டுப்படுத்தி விடுகின்றோம் என்ற விஷயங்களை தெரிவிக்க இருக்கிறார்கள்.
மூன்றாவது மிக முக்கியமானது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறந்திருக்கிறது. எனவே தமிழகத்தில் எல்லை தாண்டி சென்று மக்கள் மதுபானங்களை வாங்கி கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வர கூடிய சம்பவங்கள் நிகழ்கிறது. இது சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். மாநிலங்களுக்கிடையேயான ஒரு சிக்கலை ஏற்படுத்திவிடும். கட்டுப்படுத்த முடியாத ஒரு பிரச்சனையாக மாறிவிடும்.
எனவேதான் நாங்கள் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு வரையறையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மதுக் கடைகளைத் திறந்து இருக்கின்றோம். திடீரென்று முதல் நாள் என்பதால் நிறைய கூட்டம் வந்து விட்டது அதனை சமாளிப்பதற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் செய்து விடுகிறோம் என்ற உறுதியை இந்த மனுவில் குறிப்பிட இருக்கின்றார்கள். இந்த விஷயங்களை மேற்கோள் காட்டி தான் இந்த மதுபான கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு வைக்க இருக்கின்றது.