Categories
லைப் ஸ்டைல்

திருமணத்துக்கு முன் தம்பதிகள் வெளிப்படையாகப் பேச வேண்டிய மூன்று விஷயங்கள் …!!

எவ்வளவு அசௌகரியமாக உணர்ந்தாலும் இந்த விஷயங்களைப் பேசத்தான் வேண்டும்.

நாம் வாழும் சமுதாயத்தில் திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புதிய ஆடைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள், கொண்டாட்டங்கள். எல்லாம் முடிந்தவுடன், இருவர் மட்டுமே வாழப்போகும் வாழ்க்கை தொடங்குகிறது. உங்கள் வாழ்க்கை முழுவதையும் (சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ) செலவழிக்கப் போகும் உங்கள் இணையருடன் நீங்கள் பேச வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. இப்போது அவை பற்றிப் பேச நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தாலும் நிச்சயம் பேசத்தான் வேண்டும். இந்த உரையாடல்கள்தான் நீங்கள் வாழப்போகும் வாழ்க்கையை வழிநடத்தும்.

உங்கள் இணையருடன் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில உரையாடல்கள்:

1. நிதிநிர்வாகம் குறித்த உரையாடல்:

சிலர் தங்கள் இணையருடன் பணம் குறித்த உரையாடலுக்கு மிகவும் தயங்குவார்கள். ஆனால், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளையும் செலவுகளையும் வீட்டையும் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயம் இணையரின் நிதி நிலைமை பற்றி அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் இருவரும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர், வருங்காலத்தை மிகத்தெளிவாகத் திட்டமிடுங்கள். குடும்பத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இருவரின் நிதி நிர்வாகத்துக்கும் முக்கியப் பங்குண்டு. எனவே நேர்மையாக வெளிப்படையாக நிதி நிர்வாகம் பற்றிப் பேசுங்கள். இதுபற்றிப் பேசத் தயங்க வேண்டாம்.

2. குழந்தை பற்றி திட்டமிடுதல்:

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவது, தள்ளிப்போட விரும்புவது என்பது மிக அடிப்படையான விஷயம். இதுபற்றிப் பேசத் தயங்குவது சரியான ஒன்றல்ல. ​​நீங்களும் உங்கள் இணையரும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருப்பது திருமணத்துக்குப்பின் தெரிய வந்தால் அது சிக்கலான ஒன்று. திருமணம் செய்ய முடிவு செய்ததும் குழந்தைகள் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் இணை எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆண் குழந்தையை விரும்புகிறாரா பெண் குழந்தையை விரும்புகிறாரா, ஏன் விரும்புகிறார். இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தெரிந்துகொள்வது முக்கியம்.

3. குடும்பம் பற்றிய பேச்சு:

நீங்கள் எப்படி வளர்க்கப்பட்டீர்கள், உங்கள் குணம் இவற்றைப் பொறுத்து, உங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றி உங்களுக்குத் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் வாழ விரும்புகிறீர்களா? அல்லது தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் இணையின் விருப்பம் என்ன இதுபற்றி திறந்த மனதோடு உரையாடுங்கள். வெளிப்படைத் தன்மை இல்லாமல் பொறுத்துக்கொள்வது என்பது உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துவிடும். எனவே இதுபற்றி நீங்கள் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியம்.

Categories

Tech |