ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸி. வீரர்கள் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டும், பேன்கிராஃப்ட்டிற்கு ஒன்பது மாதமும் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அவப்பெயரை உண்டாக்கிய இந்தச் சர்ச்சையில் சிக்கியப்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித், அழுகையுடன் மன்னிப்புக் கேட்டார். மேலும், தனது தடைக்காலத்தில் ஸ்டீவ் ஸ்மித், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார்.
தடை முடிந்து உலகக்கோப்பை, ஆஷஸ் ஆகிய தொடர்களில் விளையாடியபோது ஸ்மித், வார்னர் ஆகியோரை மைதானத்தில் வைத்தே ரசிகர்கள் பலர் வெறுப்பேற்றிய சம்பங்களும் அரங்கேறின. ஆனால், அவர்களுக்கு ஸ்மித் தனது பேட்டிங்கால் பதிலளித்தார். அவர் ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகளில் மூன்று சதம் உள்ளிட்ட 774 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதனிடையே ஸ்டீவ் ஸ்மித், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி டேனி வில்லிஸுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கடந்த வருடம் இதே மாதம் தான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐஸ் ஹாக்கியை பார்த்துக் கொண்டிருந்தததாகப் பதிவிட்டிருந்தார். ஸ்டீவ் ஸ்மித் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளார்.
https://www.instagram.com/p/B6c9N6DJH-T/?utm_source=ig_web_button_share_sheet