2015இல் அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அகில இந்திய விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் ஆலோசகர் பட்டியலில் விளையாட்டுகளில் சாதித்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்தவகையில், டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே வரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது வெளியான புதிய ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து சச்சின், விஸ்வநாதன் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பட்டியலில் தடகள ஜாம்பவான் பி.டி உஷா, பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அஞ்சலி பகவத் உள்ளிட்ட ஏழு வீரர்கள் புதிதாத இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இக்குழுவில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை 27லிருந்து தற்போது 18ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.