வேலூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர்தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை பகுதிகளில் அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பலர் தள்ளுவண்டி மூலம் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் அருகருகே கடை வைத்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின்படி சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் அருகருகே கடை வைத்திருப்பவர்கள் உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டனர். அப்போது பழ கடை வைத்திருந்த ஒரு பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் பெண் தூய்மை பணியாளர் சாந்தகுமாரி அந்த பெண்ணிடம் தட்டி கேட்டபோது அவரையும் தரக்குறைவாக பேசி தாக்கியதாக தெரிகின்றது. எனவே அந்த பழ வியாபாரி பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் அண்ணா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்ததால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் வடக்கு காவல் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.