அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காளவாய்க்கரை வீரவன்னியர் தெருவில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் கணவரை பிரிந்து கடந்த 11 ஆண்டுகளாக தாளவாடி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தன்னுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் மகேந்திரன்-வீரச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மரியம்மாளுக்கும், மகேந்திரனுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது மனைவி வீரச்செல்வி அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு மாரியம்மாள் தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு எதிர்வீட்டில் வசிக்கும் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி வீரச்செல்வி ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி வீரச்செல்வி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.