மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகில் நல்லூர் மருகால்தலை காலனியில் பரமசிவன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வீட்டிலேயே செல்போன் மற்றும் லேப்டாப் பழுது பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வடசேரி அருந்ததியர் காலனி பகுதியில் சாரதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்க்கிடேயே பரமசிவனும் சாரதாவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதன்பின்னர் இருவரும் குழந்தை இல்லாத நிலையில், நல்லூர் மறுகால்தலை காலனியில் வசித்து வந்துள்ளனர்.
இதில் மனைவி சாரதா இருதய நோய் காரணமாக சிரமப்பட்டதால் அவரை பரமசிவன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சாரதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பரமசிவன் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் படுக்கை அறைக்குள் சென்ற பரமசிவன் நீண்ட நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் உறவினர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பரமசிவன் கடைசியாக மனைவி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரது அறையை சோதனையிட்டதில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் தன் மனைவி சாரதா இல்லாத உலகில் நானும் உயிர் வாழ ஆசைப்படவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் எங்களின் கடைசி ஆசை எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என்றும் என் மனைவி கழுத்தில் இருக்கக்கூடிய தாலியை கழற்றக்கூடாது என்றும் எழுதி இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து பரமசிவன் மற்றும் சாரதா இருவரின் சடலமும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.