Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபடச்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியாசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பன் புயல்:

மிகக்கடும் புயலான ஆம்பன் இன்று காலை 11 மணி நிலவரப்படி சற்று வலுவிழந்து கடும் புயலாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கொல்கத்தாவில் இருந்து தெற்கு – தென்கிழக்கே சுமார் 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இந்த ஆம்பன் புயலானது மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்க கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வரும் 20ம் தேதி வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல, சூறாவளி காற்று மணிக்கு 155 முதல் 165கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல்,லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |