Categories
மாநில செய்திகள்

மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!!

மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் மே 15ம் தேதி சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

மேலும் மே 15ம் தேதியன்று சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து வரும் 16ம் தேதி அன்று சூறாவளி காற்று 55 முதல் 65 கி.மீ வரையிலும், அவ்வப்போது 75 கி.மீ வரையிலும் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மே 17ம் தேதி சூறாவளி காற்று 65 முதல் 75கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 85 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 18 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

3 மாவட்டங்களில் கனமழை:

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |