பள்ளி ஆசிரியை கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் ஜான்சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தாண்டவன்காடு பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வசந்தி தனது வீட்டின் பின் பகுதியில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு வாலிபர் முககவசம் அணிந்து கொண்டு வசந்தி வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி கீழே இறங்கியுள்ளார்.
இதனையடுத்து வசந்தி இருக்கும் இடத்திற்கு அந்த மர்மநபர் சத்தமில்லாமல் சென்று அவரின் கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வசந்தியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.