துணியில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் அருள் ஞான ஜோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெர்லின் நேகா என்ற ஒன்பது வயது மகள் இருந்தார். ஜெர்லின் நேகா நேற்று மாலை வீட்டின் முன்பு துணியால் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துணி கழுத்தை நெருக்கமாக இறுக்கியதால் மயக்கமடைந்தார்.
இதைப் பார்த்த பெற்றோர்கள் பதற்றத்துடன் சிறுமியை, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெர்லின் நேகா மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சிறுமியின் தாயார் நிஷா கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.