பேருந்தில் பெண் தவறவிட்ட பணத்தை 10 நிமிடத்தில் கண்டுபிடித்த சட்ட ஒழுங்கு காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்களை போலீசார் பாராட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருளாண்டி-சீனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீனியம்மாள் 40 ஆயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்தது. இதனையடுத்து சீனியம்மாள் மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது சீனியம்மாள் வைத்திருந்த பையில் பணம் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் அதற்குள் சீனியம்மாள் வந்த பேருந்து அங்கிருந்து சென்று விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற சீனியம்மாள் மண்டேலா நகரில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த சதீஷ்குமார் என்ற காவலரிடம் இதுகுறித்து கூறினார். இது தொடர்பான தகவலை உடனடியாக மதுரை சிந்தாமணி சோதனைச் சாவடியில் பணிபுரியும் போலீஸ்காரர் ஜெகனிடம், காவலர் சதீஷ்குமார் விரைந்து தெரிவித்தார். இதனையடுத்து சிறிது நேரத்தில் சிந்தாமணி சோதனைச் சாவடிக்கு சீனியம்மாள் பயணம் செய்த தனியார் பேருந்து வந்தது.
அந்த பேருந்தை போலீஸ்காரர் ஜெகன் நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் பேருந்துக்குள் கிடந்த பணப் பையை எடுத்து போலீஸ்காரர் ஜெகனிடம் கொடுத்துள்ளார். அதன்பின் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபோஸ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு 40 ஆயிரம் ரூபாயை சீனியம்மாளிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு பணம் தொலைந்தது தொடர்பாக பெண் கொடுத்த தகவலையடுத்து துரிதமாக செயல்பட்ட சட்ட ஒழுங்கு காவலர் ஜெகன், அஜித் கண்ணன், போக்குவரத்துக் காவலர்கள் சதீஷ்குமார், அருள் ஆகியோரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.