இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஷீசன் கானை காவல்துறையினர் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அதன்படி அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதாவது, துனிஷா சர்மா சாவுக்கு நான் காரணம் இல்லை. முன்பே அவர் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இப்போது தற்கொலை செய்து தன் மீது பழி போட்டு உள்ளார் என்று தெரிவித்தார். எனினும் ஷீசன்கானிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் துனிஷா சர்மாவின் தாயார் பரபரப்பு பேட்டியளித்ததாவது “என் மகள் நடிப்பு மட்டுமே இலக்காக கொண்டிருந்தாள். திரையுலகில் புகழ்பெற வேண்டும் என்பது அவளது ஆசை ஆகும்.
ஷீசன்கான் சென்ற 4 மாதங்களாக என் மகளை மிரட்டி வந்தான். வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதால், ஒருக் கட்டத்தில் என் மகள் வேறு வழியின்றி சம்மதித்தாள். ஆனால் என் மகளுக்கு அவன் துரோகம் செய்து விட்டான். இதற்கிடையில் ஷீசன்கானுக்கு பெரும்பாலான துணை நடிகைகளுடன் பழக்கம் இருக்கிறது. நிறைய பெண்களை அவன் ஏமாற்றி இருக்கிறான். இதனை அறிந்த என் மகள் தற்கொலை செய்தார்.
ஆகவே அவனுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்” என அவர் கூறினார். இதற்கிடையே நடிகை துனிஷா சர்மா தற்கொலை குறித்து பல தகவல்கள் பரவியுள்ளது. அதாவது, துனிஷா சர்மா கர்ப்பமாக இருந்ததாகவும், லவ்ஜிகாத் வாயிலாக அவரை மதமாற்ற முயற்சி நடந்ததாகவும் தகவல்கள் பரவியது. மும்பை பாஜக தலைவர்களும் நடிகர் ஷீசன்கான் மீது மதமாற்ற புகாரளித்தனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.