மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன அடைக்கனூர் பகுதியில் ராமலிங்கம்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் ராமலிங்கம் குளித்து விட்டு துண்டை வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காயப்போட வந்துள்ளார். அந்த இரும்புக் கம்பி செட்டாப் பாக்ஸ் டிஷ் உடன் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் ராமலிங்கம் இரும்புக் கம்பியில் துணியை காயப்பட்டபோது மின்சாரம் தாக்கி சத்தமிட்டுள்ளார். இதைக் கண்ட அவருடைய மனைவி லட்சுமி கணவரை காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்று பிடிக்க முயற்சி செய்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மகன் அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் அன்பழகன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அதன்பின் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்த ராமலிங்கம்-லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அன்பழகனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.