மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிப் பூக்கள் துபாயில் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
மதுரை மல்லியின் வாசம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் மதுரை மல்லிகை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி அதனை அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது இல்ல நிகழ்ச்சிக்காகவும், அலங்காரங்கள் செய்யவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மல்லிகை மலர்களை மதுரையிலிருந்து துபாய்க்கு அதிக அளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார் தமிழகத்தை சேர்ந்த பெருமாள்.
இவர் 32 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஒரே ஒரு மலர் கடையைத் தொடங்கி தற்போது 189 கிளைகளை நடத்தி வருகிறார். குறிப்பாக 2017 இல் இருந்து மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் சர்வதேச போக்குவரத்தை துவங்கிய பொழுது முதல் சரக்காக மதுரை மல்லி உள்ளிட்ட 300 கிலோ மலர்களை துபாய்க்கு இவர் இறக்குமதி செய்துள்ளார். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் யு.ஏ.இ என்ற மலர்கள் இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.
ஆனால் அதற்குள் துபாயில் விற்று தீர்ந்து விடும் என்று பெருமாள் கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதில் “ஐக்கிய அரபு அமிரகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 500 கிலோ மதுரை மல்லி மட்டும் இறக்குமதி செய்து வருகிறேன். இது மல்லிகை பூ அதிகமாகப் பூக்கும் காலங்களில் அதிகரிக்கும். இது தவிர மற்ற மலர்களையும் நான் இறக்குமதி செய்கிறேன். இருப்பினும் மதுரையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்கினால் மற்ற விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
மதுரையிலிருந்து நேரடியாக துபாய்க்கு இறக்குமதி செய்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்பு பெருகும். அதிலும் துபாயில் மதுரை மல்லிக்கு என்றே அதிக வரவேற்பு உள்ளது. எனவே தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து மதுரை விமான நிலையத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு நலவாரியம் அமைத்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகும். இதனை செயல்படுத்தி தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.