Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி அலுவலகம் முற்றுகை….. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி 259 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளமான 292 ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பழைய நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் தமயந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. இதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலகத்திற்கு துப்புரவு பணியாளர்கள் சென்றுள்ளனர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் வாகனத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி 292 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதி அளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |