தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது உடைய சித்திரை என்பவர் ஓட்டினார். மணியாச்சி காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தை தாறுமாறாக ஓட்டி பாலத்திலிருந்து அங்கு இருந்த சாலையோரம் உள்ள கால்வாயில் தலைகீழாக சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த மணியாச்சு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவலாளர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பெரும்பாலானவர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இதில் மணப்படைவீடு திருமலைகொழுந்து புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் 65, சந்திரதேவர் மனைவி செல்லத்தாய் 60, மாரியம்மாள் 50, மகாராஜன் மனைவி லிங்கம்மாள் 35, வேறொரு மகாராஜன் மனைவி பேச்சியம்மாள் 30, மணிகண்டன் மனைவி விஜய் 36 இவர்கள் 6 பேரையும் மீட்டு ஒட்டபிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் அந்த சரக்கு வாகனத்தில் இருந்த 22 பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியானவர்கள் யார் யார் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த கோர விபத்து தொடர்பாக ஓட்டுநர் சித்திரையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.