Categories
சென்னை நீலகிரி மாவட்ட செய்திகள்

தாயை இழந்து தவிப்பு… பூங்காவில் பராமரிக்கப்பட்ட 2 மாத புலிக்குட்டி… திடீரென உயிரிழப்பு…!!

முதுமலையில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 6௦ நாட்களே ஆன புலிக்குட்டி திடீரென உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் உள்ளது. அங்குள்ள சீமர்குழி ஓடை பகுதியில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த இறந்த புலியின் அருகே பிறந்து சில நாட்களே ஆன இரண்டு ஆண் புலி குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இதனை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டு வண்டலூர் பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து இந்த இரண்டு புலி குட்டிகளையும் பூங்கா அதிகாரிகள் வளர்த்து வந்தனர். அதோடு இந்த புலி குட்டிகளின் அசைவுகளை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு மருந்துகளும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மெலிந்து காணப்பட்டது.

இதனால் அந்த புலிக்குட்டியை தனிமைப்படுத்தி பூங்கா மருத்துவர்கள் அதற்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் அளித்து வந்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புலிக்குட்டியின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 5 ஆம் தேதி அந்த ஆண் புலிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து புலிக்குட்டியை பிரேத பரிசோதனை செய்த பூங்கா மருத்துவர்கள் அதன் பின் பூங்கா வளாகத்தில் உள்ள மின் மயானத்தில் அதனை எரியூட்டினர்.

Categories

Tech |