கோவையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியை அடுத்த சேத்துமடை பழைய சர்க்கார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்வித்யாசங்கர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு கால்நடைகளை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. குறிப்பாக இவர் ஊரில் யாரிடமும் இல்லாத அரிய வகை கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார்.
அதன்படி இவரிடம் அரிய ரக வெள்ளாடுகள், காங்கேயம் காளைகள் அதன் கன்று குட்டிகள் என வளர்த்து வந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்றைய தினம் தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு இவர் சென்றுவிட இவரது மைத்துனரான அப்பாதுரை தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டார். அப்போது திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டு தோட்டத்திற்கு ஓடிச்சென்று பார்த்தபோது புலி ஒன்று அருகே உள்ள ஓடையில் பாய்ந்து வனத்திற்குள் தப்பிச் செல்வதை கண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்ததும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பார்வை இடுகையில், அங்குள்ள கன்று குட்டிகளும், ஆடுகளும் புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தன.
இதையடுத்து தகவல் தெரிவித்தவரிடம் விசாரிக்கையில், புலிதான் தாக்கி சென்றது என்று அவர் உறுதிபட கூற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஊர் மக்கள் தங்கள் கால்நடைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.