இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படத்தை இன்று இலங்கை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் இருக்கின்றனர். இவர்களின் விவரம் பற்றிய தகவலை தெரிவிக்க இலங்கை அரசு தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் இருக்கும் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையில் , இலங்கை நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், யாரும் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் , வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் நாளை முதல் வருகின்ற 28_ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.