டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது.
செல்போனில் வாக்குவாதம் கடினமாகவே கோபம் கொண்ட விஜய் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து ராபர்ட்டை நேரில் சென்று தாக்கியுள்ளார். அப்போது ராபர்ட்டின் நண்பர் போஸ் இவர்களை தடுக்க முயற்சித்துள்ளார் இதில் கோபம் கொண்ட விஜய் மற்றும் அவரது நண்பர்கள் போஸை கீழே தள்ளி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் போஸ் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார்.
இதனைதொடர்ந்து தாக்கிய கும்பலே போஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் விஜய் நண்பர்களில் ராஜசேகர் மற்றும் வருண் ஆகிய இருவரை கைது செய்து தப்பி ஓடிய விஜய் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.