டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ட்விட்டர் நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களாக அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யும் யுத்திகளை சீனா திருட முயற்சிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகம் உளவு வேலை பார்ப்பதாக கூறி அதனை உடனடியாக அமெரிக்கா மூடியது. அதிலிருந்து சில தினங்களிலேயே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா நாட்டில் இருந்த அமெரிக்க தூதரகத்தை மூடியது. இச்சம்பவங்கள் இரண்டு நாடுகளுக்கு இடையே இருந்த மோதல் போக்கை மேலும் விரிவடைய செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க மக்களின் தகவலைப் பாதுகாக்கும் விதமாக சீன நிறுவனமான பைட்டானின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா தடை விதிக்க முடிவு செய்தது. இதனை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் டிக் டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டன. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலி வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானதோடு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வமாக இது குறித்த தகவலை தெரிவிப்போம் என்றும் கூறியிருந்தது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அந்நாட்டில் இருக்கும் நிறுவனத்திடமே விற்றுவிட வேண்டும் அல்லது முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதையும் ட்விட்டர் நிறுவனம் கொடுக்கவில்லை. இருந்தும் இரண்டு பிரபல நிறுவனங்கள் டிக் டாக் செயலியை வாங்குவதற்காக போட்டி போடுவது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.