வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘வெங்காய விலை ஏற்றத்தைத் தொடர்ந்து என்னை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
முதல் கட்டமாக பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம், பின்னர் ரேசன் கடைகளில் விற்பனை செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டு சென்னையில் 500 ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக நேற்று 296 ரேசன் கடைகளிலும், 179 பண்னை பசுமை கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து முதல் கட்டமாக 500 டன் எகிப்து வெங்காயத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வெங்காயம் விரைவில் வந்தடையும்.
25 ஆயிரம் கிலோ வெங்காய விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு, அவற்றை ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரம் ஏக்கரில் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவை விமர்சனம் செய்கிறார் ஸ்டாலின். ஆனால், அவர்கள் ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்? திமுகவின் ஆட்சி காலத்தில் வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வந்துவிடும். வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.