டிப்பர் லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடித்த நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் பின் திருமண மண்டபம் அருகில் உள்ள கடையில் பால்ராஜ் டீ வாங்கிக் கொண்டு அருகில் பூட்டி கிடந்த கடையின் முன்பக்கம் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற டிப்பர் லாரியின் பின் சக்கர ஆக்சில் முறிந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக 2 டயர்கள் கொண்ட சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இந்நிலையில் டீ குடித்துக் கொண்டிருந்த பால்ராஜ் மீது இந்த சக்கரம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எம்.சவேரியார்புரம் பகுதியில் வசிக்கும் லட்சுமணன், பாலமுருகன் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்த பால்ராஜின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்தையாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.