கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான சங்கீதா மற்றும் உமாதேவி போன்றோருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னக்காம்பட்டி-இடையகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரி கார் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராமசாமி, சங்கீதா, உமாதேவி ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.