ஆரம்ப சுகாதார நிலைய டிரைவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி-ராஜபாளையம் கடற்கரைப் பகுதியில் ரத்தினசாமி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பார்வையிட்டனர்.
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரத்தினசாமியை மர்மநபர்கள் யாரோ குத்தி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரத்தினசாமியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரத்தினசாமியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிப்காட் காவல்துறையினர் ரத்தினசாமிக்கு யாருடனும் முன்விரோதம் உள்ளதா? அல்லது எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.