கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி மேம்பால பக்கவாட்டில் மோதி கவிழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த கிறிஸ்டோ வாகனத்திலிருந்து வெளியே வந்த அடுத்த நொடியே கார் முழுவதும் மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீர் பீய்ச்சி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதில் படுகாயமடைந்த கிரிஸ்டோ மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வளநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.