கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
உலகெங்கிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த கடற்கரை பகுதிக்குள் பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதோடு, பக்தர்கள் நாழிக் கிணற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் பழம், தேங்காய் போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யவும், கோவில் வளாகத்தில் இளைப்பாறுவதற்கு அனுமதி கிடையாது.