திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கபடுவதாகவும், இனிமேல் இதுபோன்ற நிலை தொடர கூடாது என்று எச்சரித்துள்ளார். அவ்வாறு தொடருமேயானால் திருச்சி விமான நிலையம் மீது வெடிகுண்டு வீசப்படும் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி அடைந்த மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விமான நிலைய பணியாளர்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டதோடு, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையம் முழுவதும் ஏதேனும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்தப் பெண்ணின் விவரம் யார் என்பது குறித்து அவர் பேசிய போன் நம்பரை வைத்து விமான நிலைய ஆணையக அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.