கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் மட்டும் 388 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ஆம் தேதி முதல் இலவச தரிசனம் முழுமையாக தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் பதிவுசெய்வது 30 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்துமே முழுமையாக மூடப்பட வேண்டும் என்று திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர். முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த ஊர்டங்கை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து திருமலைக்கு மட்டும் பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் பரவல் குறித்து திருமலையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அங்கு இருக்கும் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.