திருப்பதி சேஷாசலம் பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பக்தர்களுக்கு நாமமிட்டு அவர்கள் தரும் அன்பளிப்பை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். திருப்பதி கோவில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டித்தந்தது. அந்த திட்டத்தில் ஸ்ரீனிவாஸ்க்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
அவருக்கு திருமணமாகாத நிலையில் உறவினர்கள் யாரும் இல்லை. இவர் மட்டுமே தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். அதன்பிறகு தனது வீட்டை தேவஸ்தானத்திற்கு ஒப்படைப்பதாக உயில் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அவரின் வீட்டை உரிமை கொண்டாடி பலரும் அதை முறைகேடான வகையில் விற்க முயற்சி செய்தனர்.
இதை அறிந்த தேவஸ்தான வருவாய்த்துறை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து வீட்டை சோதனை செய்தனர். அப்போது இரண்டு பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் எனவும், 25 கிலோ நாணயங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் வீட்டை தேவஸ்தானம் எடுத்துக் கொண்டதாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இறந்தவரின் வீட்டில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.