ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் ,பிராந்தியங்கரை ,மூலக்கரை வடமழைமணக்காடு மற்றும் கத்திரிப்புலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர் .இதுதொடர்பாக கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆடு திருடிய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் செட்டிபுலம் பகுதியில் மர்ம நபர்கள் ஆடு திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத்தொடர்ந்து வேதாரண்யம் செங்காதலை பாலம் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் மற்றும் திருத்துறைபூண்டி பெரிய சிங்களாந்தி பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் என்பது தெரியவந்தது . இவர்கள் இருவரும் கரியாப்பட்டினம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.