டிட்கோ தொழிற்பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வாயிலாக அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவெடுத்தது. கோவையை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்கவைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இப்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாகவுள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். அத்துடன் எவ்வித கட்டாயமும் இன்றி விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இந்த தொழிற்பூங்காவில் அமைய இருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். ஆகவே டிட்கோ வாயிலாக தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க இப்போது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது..