பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் வேலன்-அமுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அமுதா மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா சத்தமிட்டார். இந்நிலையில் அமுதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நகையை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்தவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சண்முகத்தை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன்பின் காவல்துறையினர் சண்முகத்தை கைது செய்து அவரிடம் இருந்த 10 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.