தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி மற்றும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய “டெட்” தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த டெட் தேர்வு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி வருடந்தோறும் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி 2022-ஆம் வருடத்துக்கான “டெட்” தேர்வு தொடர்பான அறிவிப்பை TRB கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது. அத்துடன் இத்தேர்வுக்கு மார்ச் 14-ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் வருடத்துக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (www.trb.tn.nic.in) என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் தேர்வுக் கட்டணம் ரூபாய் 500 ஆகவும், SC ,ST வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 250 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. அதுமட்டுமின்றி ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13ம் தேதி ஆகும்.
ஆகவே இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும் தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் டெட் தேர்வு நேரடி தேர்வாக இருக்குமா?.. அல்லது கணினிவழி முறையில் இருக்குமா என்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட டெட் தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். நடப்பு ஆண்டு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.