தமிழ்நாடு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அதனால் ஏப்ரல் 8ம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பங்களை பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு OTP அனுப்பப்படவில்லை. அதோடு விண்ணப்பிக்க கடைசி நாளான ஏப்ரல் 13ம் தேதி அன்று இணையதளம் முற்றிலுமாக செயல்படவில்லை. மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.ப. வெங்கடேசன், தமிழக வாலிபர் சங்கத்தினர் போன்றோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய போது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடைசி வாரத்தில் மட்டும் 1.5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அத்துடன் சர்வர் பிரச்சனை காரணமாக நகர்ப்புற உள்ளவர்கள் இணையதள வசதிகளை பயன்படுத்தி விண்ணப்பித்திருக்க வசதிகள் இருக்கிறது. ஆனால் கிராமப்புற மக்களுக்கு சரியாக இணையதள வசதிகளை கிடைக்காததால் அவர்களால் விண்ணப்பித்திருக்க முடியாது. அதனால் சர்வர் பிரச்சனை சரி செய்து கால அவகாசத்தை நீட்டித்து விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.