தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியமானது இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடம் கொரோனா எதிரொலியாக அரசு சார்ந்த எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு சார்ந்த போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TRB மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த ஆசிரியர்களுக்கு 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டங்களில் பணி செய்ய ஆணை வழங்கப்படுவதால், அதிக சிரமம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பாக TN TRB-க்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் நெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆசிரியர்கள் கூறியதாவது, தேர்வு வாரியத்தின் இந்த உத்தரவானது எங்களை அலைகழிப்பதோடு, தேர்வு பணியின்போது குழப்பத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்துவதாக கூறினர்.
அதுமட்டுமல்லாமல் 12 மணி நேரத்துக்கு மேல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து TN TRB யால் நடத்தப்படும் காணொளி கூட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்ணியக் குறைவான வார்த்தைகளை கூறி மிரட்டப்படுவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிலையில், அதில் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதாவது ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என்று ஆசிரியர்கள் எச்சரித்தனர்.