தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் பணியமர்த்தபடுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா 3-ம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த கோரி கோரிக்கை எழுந்தது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆகவே காலிப் பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதனால் பள்ளிகளில் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, இதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது ஏப்ரல் 3ஆம் வாரத்தில் டெட் முதல் தால் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதனால் விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வருடங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 09/12/2012, 10/12/2012 மற்றும் 11/12/2012 போன்ற தேதிகளில் பணி நியமன ஆணைகளை பெற்ற தமிழ் மொழிப் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.